வெள்ளிக் கொலுசு தொழில்... தீபாவளி விற்பனை இல்லாததால் வேதனையில் வியாபாரிகள்!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தீபாவளி பண்டிகைக்கு வடமாநில வெள்ளிக் கொலுசுகள் செய்ய ஆர்டர்கள் வராததால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்...
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கால் கொலுசுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள செவ்வாய் பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி மற்றும் சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் இயங்குகின்றன. இந்தத் தொழிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வெள்ளி கால் கொலுசு, அரைஞாண்கொடி, சந்தனகிண்ணம், குங்கும சிமிழ், டம்ளர், வெள்ளித்தட்டு உள்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர்.
சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருட்கள் மற்றும் கொலுசுகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களிலும் சேலம் வெள்ளிப் பொருள்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.
கர்நாடகம் மற்றும் தெலுங்கானா பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது பெண்கள் புதிய கால்கொலுசு அணிவதைப் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இதை முன்னிட்டு அண்டை மாநில வெள்ளி வியாபாரிகள் சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் மூன்று மாதத்திற்கு முன்பே வெள்ளிக் கொலுசு செய்வதற்கான ஆர்டர்களைத் தந்து விடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணத்தால் கொலுசு ஆர்டர்கள் வியாபாரிகளுக்கு வரவில்லை. அதுபோல வடமாநிலங்களுக்கு ரயில் போக்குவரத்து இல்லாததால் வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளி பொருட்கள் அனுப்பி வைக்க முடியாத நிலைக்கும் வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், இந்த ஆண்டு ஆர்டர்கள் வராததால் சேலம் வெள்ளி வியாபாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.
இது குறித்து சேலம் வெள்ளி வியாபாரி பாபுலால், “கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது 75 டன் வெள்ளி ஆர்டர் வந்தது. நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வடமாநில ஆர்டர்கள் வரவில்லை. வியாபாரம் இல்லாமல் பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Comments